ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 43,923 வாக்குகளே கிடைத்தன. கடந்த முறை இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அந்த வெற்றி 8,904 வாக்குகள் வித்தியாசத்திலேயே கிடைத்தது. அப்போது அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் யுவராஜா 58,936 வாக்குகள் பெற்ற நிலையில், திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த முறை திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவைவிட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை காங்கிரசுக்கு 64.58 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 25.75 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலைவிட கிட்டதட்ட 7 மடங்கு பெரிய வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு இந்த முறை பெற்றுத் தந்துள்ளது திமுக. அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்ததையும், ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடியதையும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில் எடுத்த பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு இது 8-வது தோல்வியாகும். கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 சட்டமன்ற இடைத்தேர்தல், அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி, 2021 சட்டமன்றத் தேர்தல், 2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி இரண்டு விதங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. கட்சியில் ஓபிஎஸ் உடனான அதிகாரப்போட்டியில் தமது செல்வாக்கை நிலைநாட்டவும், தமது மண்டலமான கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற பிம்பத்தை தக்கவைக்கவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை எடப்பாடி பழனிசாமி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.