வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே இருக்கும் சந்தன கொட்டா கிராமத்தில் வசித்து வருபவர் பூங்காவனம் (47), இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயக்குமாரி. பூங்காவனம் கணியம்பாடி அண்ணா நகர் பகுதியில் உள்ள சிலருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தவர்களிடம் அந்த பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே பூங்காவனம் நின்றிருந்தார். அப்போது பூங்காவனத்தை தேடி 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த பூங்காவனம் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அருகில் கிடந்த மூங்கில் கழிகளை எடுத்து அவரது தலையில் பலமாக அடித்தனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்துள்ளனர்.
அவர் கீழே விழுந்த போதும் அவரை அடித்துள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . வேலூர் தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று பூங்காவனத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். ராணுவ வீரர் கொலையில் 6 பேர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பணத்தகராறில் கொலை நடந்தது என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.