பெண் காவலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை அழைத்து வந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் தேனியில் இருந்து கோவை அழைத்துச் சென்றதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது. அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகும்.
தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகரான இவர், பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். குறிப்பாக திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.