தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், காவிரியில் நீர் திறப்பது கடினம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. தமிழ்நாட்டிற்கு 24,000 கன அடி நீர் கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் காவிரியில் சொற்பமான நீரை கர்நாடகா திறந்துவிட்டு வருகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் மண்டியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பெங்களூர் நகரில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், கர்நாடகா அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் முழு அடைப்பில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. பெங்களூர் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் காவிரியில் இருந்து நீர் திறப்பது கடினம். ஆனாலும், உச்சநீதிமன்ற உத்தரவையும் நாம் பின்பற்ற வேண்டும். என்ன ஆனாலும் நமது மாநிலத்தின் நலனை நாம் பாதுகாக்க வேண்டும். இதுவே நமது கடமை” என்றார்.