இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது கோலிவுட், டோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். முதல் பாலிவுட் படத்திலேயே நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நயன்தாரா, குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக அதிக நேரம் செலவிடுவதால், அதிக படங்களில் நடிக்காமல் பிசினஸில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கேரளாவில், அப்பார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்யும் தொழிலில் நயன் – விக்கி இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது நயன்தாராவின் மாமனாரும், விக்னேஷ் சிவனின் தந்தையுமான சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில், விக்னேஷ் சிவனின் தந்தை தங்களுக்கே தெரியாமல் தங்களுடைய சொத்துக்களை அபகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகார் மனுவில் விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைவில் யார் சொல்வது உண்மை? யாருடைய பக்கம் நியாயம் உள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.