மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அஃப்தாப் என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மும்பையின் வாசி பகுதியில் அஃப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார் ஷ்ரத்தா. மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்பதால், அங்கிருந்து டெல்லிக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து, டெல்லியில் மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். நாளடைவில் அஃப்தாப் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த ஷ்ரத்தா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே, மகளின் டெல்லி வீட்டை அவரது தந்தை கண்டுபிடித்தபோது, அவர் அங்கு இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தார் ஷ்ரத்தாவின் தந்தை. இது தொடர்பான விசாரணையில் தான் ஷ்ரத்தாவை அப்தாப் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை எடுத்து வந்து 35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தேன் என்ற அதிர்ச்சி வாக்குமூலத்தையும் அளித்தார். நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் புதிய தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொடூர கொலை பற்றி தற்போது வெளியான தகவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினில் போட்டு அப்தாப் பவுடர் ஆக்கியுள்ளார். கொலை செய்த 3 மாதங்களுக்கு பிறகு, ஷ்ரத்தாவின் தலையை அப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், பல அறிந்திராத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்தது.
எப்படி கொலை செய்யப்பட்டது, உடல் பாகங்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் 6,600 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அதேபோல, கொலை நடந்த தினமான மே 18ஆம் தேதி, ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு ஜோமாட்டோ மூலம் சிக்கன் ரோலை ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார் அப்தாப். இந்த கொலை தொடர்பாக தினம் தினம் வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.