அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடைகள் கொடுத்த விவகாரத்தில் இன்று நாட்டின் பல மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் உரிய விதிகளைப் பின்பற்றாமல் நன்கொடையை பெற்றுக் கொண்டு வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் கோரியிருக்கின்றன. ஆகையால், தேர்தல் ஆணையம் இத்தகைய முறைகேடுகள் மீது நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக இந்த மோசடிகளில் ஈடுபட்ட 87 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தமது பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது தேர்தல் ஆணையம். மேலும், இது தொடர்பாக வருமான வரித்துறைக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில், இன்று 12 மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ”தேர்தல் ஆணையத்தில் 2018-19இல் பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத 199 அரசியல் கட்சிகள் ரூ.445 கோடி வருமான வரி விலக்கு கோரியிருந்தன. இது 2019-2020ஆம் ஆண்டில் ரூ.608 கோடியாகவும் அதிகரித்தது. இதில் 66 பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மட்டும் ரூ.385 கோடி வருமான வரி விலக்கு கோரியுள்ளன. ஆனால், இத்தகைய வருமான வரி விலக்குக்கான உரிய ஆவணங்களை அந்த கட்சிகள் தாக்கல் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.