மலையாள நடிகையும், தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 42.
சுபி கல்லீரல் பாதிப்பால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடுமையான கல்லீரல் செயலிழப்பு பிரச்சனையுடன் ஜனவரி 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பிஆர்ஓ தெரிவித்தார். சுபிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், நுரையீரல் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கனகசிம்ஹாசனம், காரியஸ்தான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி, பச்சகுதிர உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ‘மேட் ஃபார் ஈச் அதர்’, சூர்யா டிவி-யில் ‘குட்டி பட்டாளம்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெயர் பெற்றவர் சுபி. அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.