யூடியூப்பில் மிகவும் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30-வது வயதில் காலமானார். இவரின் மரணத்திற்கு அனியூரிசம் என்று நோய்தான் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாடிபில்டிங் கலாச்சாரம் தற்போது இளைஞர்கள், இளம்பெண் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பலரும் தங்கள் உடலை மெருகேற்ற வேண்டும், பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று பல பயிற்சிகளை செய்ய தொடங்கி உள்ளனர். முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரம் காரணமாக பலரும் ஜிம்மிற்கு செல்வதையும், பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள தொடங்கி உள்ளனர். பலரும் உடலை வேகமாக ஏற்ற வேண்டும் என்று ப்ரோட்டின் பவுடர்களை எடுக்க தொடங்கி உள்ளனர்.

இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் சிலர் ஸ்டேராய்டு எடுக்கவும் தொடங்கி உள்ளனர். முக்கியமாக வேகமாக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று பலரும் ஸ்டேராய்டு எடுக்க தொடங்கி உள்ளனர். தீவிர உடற்பயிற்சி, அதீத ஸ்டேராய்டு பயன்பாடு காரணமாக பல இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் யூடியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30-வது வயதில் காலமானார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பாடிபில்டிங் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை யூடியூப்பில் பகிர்வதில் ஜோ லிண்டர் பிரபலமானவர்.
இளைஞர்கள் இடையே மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து வந்தார். பாடிபில்டிங் தொடர்பாக தினசரி செய்யும் பயிற்சிகள் மற்றும் ஆன்லைனில் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களால் ஜோ பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அவர் ஜோஸ்தெடிக்ஸ் பயிற்சி அமைப்பு என்று தனது சொந்த பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை இளைஞர்கள் இடையே பிரபலமாகி கொண்டு சென்றார். அவரது காதலியான சக பாடிபில்டர் நிச்சா உடன் இணைந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் பாடி பில்டிங் தொடர்பாக ரீலிஸ் போட்டு வந்தார். இந்நிலையில்தான் நேற்று மாலை அவர் நரம்பு வெடித்து பலியானார். இந்தச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரான நோயல் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தார்.
இணையத்தில் ஜோ பலருக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரது திடீர் மறைவு பாடிபில்டிங் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், அனியூரிசம் என்று நோயின் காரணமாக ஜோ காலமானார் என்று கூறி உள்ளார். அனியூரிசம் என்பது இரத்த நாளத்தின் சுவர் பகுதிகளில் உள்ள பலவீனத்தால் ஏற்படும் நோயாகும். இந்த பலவீனத்தால் ஏற்படும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இந்த பகுதிகளில் ரத்தம் செல்ல முடியாமல் தேங்குவதால் பலூன் போல அந்த பகுதிகள் வீக்கம் அடையும்.
அனியூரிசம் காரணமாக நரம்புகள் வெடித்து உட்புற இரத்தப்போக்கு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். அதேபோல் பார்க்கின்சன் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோயால் நரம்புகள் வெடிக்கும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது. சிறிய சிறிய அறிகுறிகளை உடனடியாக கண்டுகொண்டால் முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டு இதில் இருந்து விடுபட முடியும்.