சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி(35) என்பவர் கடந்த 12ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சைதாப்பேட்டை கேபி கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பூங்கொடியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துள்ளார்.
ஆனால் நகையை பூங்கொடி பிடித்துக் கொண்டதால், இருசக்கர வாகனத்தை ஒட்டியபடியே அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளி வழிப்பறி கொள்ளையன் அவருடைய நகை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். சாலையில் தடுமாறி விழுந்த பூங்கொடி அந்த வழியாக வந்த ஆட்டோவின் முன் விழுந்துள்ளார். ஆட்டோ உடனடியாக நிறுத்தப்பட்டதால் லேசான காயங்களுடன் பூங்கொடி உயிர் தப்பினார்.
இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சம்பவ இடத்தின் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பூங்கொடியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை கோதா மேடு பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்ற காவலில் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஹக்கீம் மீது ஒரு கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உட்பட 11 குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிப்பறி செய்த நகை மற்றும் இருசக்கர வாகனத்தை தன்னுடைய நண்பர் மணிகண்டனிடம் ஹக்கீம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, மணிகண்டனையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.