கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தஞ்சை, கடலூர், அரியலூரில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தடை செய்யப்பட்ட 8 வகையான தொழிற்சாலைகள் ஆரம்பிக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனுமதி இல்லை என தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை எடுப்பதற்கு அனுமதியில்லை என தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பயப்பட வேண்டாம். முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் எழுதுவார். எந்த ஆலைக்கும் அனுமதி கிடையாது. அச்சப்பட வேண்டாம். தடை செய்யப்பட்ட பகுதியில் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.