விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், பிராசஸிங் கட்டணம் ஏதும் இல்லாமல் கடன் வழங்குவதற்காக மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எஸ்.பி.ஐ. வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e-NWRs) ஈடாக இந்த உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பிணையங்களும் தேவைப்படாது. அதுமட்டுமின்றி, குறைந்த வட்டியில் இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விவசாயக் கடன்களின் பயன்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காகவும், இந்தியாவில் விவசாய கடன்களை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், சிறு மற்றும் குறு விவசாயிகள் மத்தியில் மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீது (e-NWRs) பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கடன் திட்டத்தால் கிராமப்புறங்களில் நிதி நிலையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின்போது, அறுவடைக்கு பிறகான கடன் வசதிகளின் முக்கியத்துவம் குறித்து, கிராமப்புறங்களின் கடன்களை மேம்படுத்த கிடங்கு ரசீதுகளை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்துறையில் தற்போது நிதி நிறுவனங்கள் சந்திக்கும் ஆபத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்துறையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களை வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கையை மேம்படுத்த முழுமையான ஒழுங்குமுறை ஆதரவு வழங்கப்படும் என கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் உறுதி அளித்தது.