பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கௌரவ உதவித் தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள். வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித் தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என இணைய வழியில் பதிவு செய்து மத்திய அரசு பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.
விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடையகூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்று நர்கள். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இ-சேவை மையங்கள் ஆகிய துறையினர் வாயிலாக. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெறும் விவசாயிகள் 41973 விவசாயிகளில் 16250 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 25723 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.
இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20 வது தவணை ஊக்கத் தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20 வது தவணை வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெற விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.