Farmers: விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது. பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது.
இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2,000 வழங்கப்படுகின்றது. இதுவரை 18 தவணைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக தற்போது காத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2000 வழங்கப்படுகிறது. ஆனால் பல விவசாயிகள் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கூறுவதையும் பார்க்க முடியும். இதற்கு காரணம் E-KYC நிறைவு செய்யாத விவசாயிகளின் கணக்குகளில் பணம் வராது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தநிலையில் விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால் மத்திய அரசு வழங்கும் ரூ.6000 பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிஎம் கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.