இன்றைய நவீன யுகத்தில் தொழிற்சாலைகள் பெருகியது, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

கடல்நீர்மட்டம் உயர்வு என்பதுல், உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்ட தீவுகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். 2006 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், கடல் மட்டம் உயரும் விகிதம் 20ஆம் நூற்றாண்டை விட 2.5 மடங்கு வேகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் 2013 முதல் 2022 வரை கடல் மட்டம் ஆண்டுக்கு சராசரியாக 4.5 மிமீ உயர்ந்துள்ளது.. இது உலகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்தை நேரடியாக குறிக்கிறது.
இந்திய மற்றும் சீன கடலோர நகரங்கள் மோசமாக பாதிக்கப்படும் என்று காலநிலை அறிக்கைகள் கூறுகின்றன.. அந்த வகையில் 50 முக்கிய இந்திய கடலோர நகரங்கள் கடல் மட்டம் உயர்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள சில இந்திய நகரங்களில் 2030-க்குள் ஆபத்தான நிலை ஏற்படலாம் என்று ஆய்வு கூறுகிறது.
காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) மற்றொரு ஆய்வு அறிக்கை, மும்பை, சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட மூன்று அடிக்கு அடியில் இருக்கும் என்று கூறுகிறது.
உலக சராசரி விகிதத்தை விட, மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆசிய பிராந்தியங்களில் உலகளாவிய கடல் மட்ட உயர்வு மிக வேகமாக உள்ளது என்றும் IPCC அறிக்கை கூறுகிறது. எனவே “அரசாங்கங்கள் காலநிலை மாற்றம் குறித்து கொள்கை அளவில் செயல்பட வேண்டும்.. என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி குறைத்தால் கூட, ஆழ்கடல் வெப்பமயமாதல் மற்றும் பனிக்கட்டி உருகுவதால் கடல் மட்டம் பல நூற்றாண்டுகளுக்கு உயரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.. எனவே உலக நாடுகள் அனைத்தும் இதுகுறித்து உறுதியான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..