இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.., ஒமிக்ரானின் XXB.1.16, என்ற துணை வகை காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது..தொடர்ந்து 3 நாட்களாக, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது. கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில், தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்குமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்..
கேரளாவில் உள்ள கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இதுகுறித்து பேசிய போது “இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக அதிக தடுப்பூசி கவரேஜ் உள்ளது.. மேலும் பலர் பூஸ்டர் டோஸ்களை எடுத்துள்ளனர். கூடுதலாக, அதிக சதவீத மக்கள் இயற்கை நோய்த்தொற்றிலிருந்து தப்பிய பிறகு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். தடுப்பூசிகள் தொற்றுநோயிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது.. எனவே ஒரு அடிப்படை அளவிலான முன்னெச்சரிக்கைகள் தேவை.. ஒரு புதிய மாறுபாடு எப்போது வந்தாலும், இந்த நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.” என்று தெரிவித்தார்..
ரோஸ்வாக் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவரும் உட்சுரப்பியல் நிபுணருமான டாக்டர் ஷர்வாரி தபதே துவா இதுகுறித்து பேசிய போது “வைரஸின் கடுமையான விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போடுவதே ஒரே கவசமாகும். முதல் டோஸ், 2-வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்புசி கடுமையான நுரையீரல் நோய், நிமோனியா போன்ற நிகழ்வுகளைத் தடுக்க உதவியது.. இதுபோன்ற கோவிட் அலைகளின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறைத்தது. பூஸ்டர் டோஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பே கிடைத்தது, ஆனால் பெரும்பாலான நபர்கள் அதை போடவில்லை” என்று தெரிவித்தார்.
4-வது டோஸ் ஏன் உதவாது என்பதையும் நிபுணர்கள் விளக்கினர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உஹானில் இருந்து வந்த வைரஸ் திரிபு மூலம் உருவாக்கப்பட்டவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். தடுப்பூசிகள் இப்போது புதிய தலைமுறை மாறுபாடுகளுக்கு எதிராக திறம்பட செயல்படாமல் போகலாம், குறிப்பாக ஒமிக்ரான் மாறுபாடு 1,100 க்கும் மேற்பட்ட துணை துணை வரிசைகளைக் கொண்டது.. அதனால் 4-வது டோஸ் தேவையில்லை. தற்போது, 4வது டோஸ் தேவை என்று காட்டுவதற்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்..