புதிய ஃபாஸ்டேக் விதி குறித்து மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஃபாஸ்டேக் குறியீட்டை கண்டறிவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், கண்டறிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகும் செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை நிராகரிக்கும் விதியை மாற்றுவது தொடர்பான சில நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுற்றறிக்கை எண் NPCI/2024-25/NETC/004A,-ன்படி தேசிய கட்டண நிறுவனம் 28.01.2025 அன்று வெளியிட்ட ஃபாஸ்டேக் நடைமுறைகளில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது ஃபாஸ்டேக் வில்லையின் செயல்பாட்டு நிலை குறித்து அதனை விநியோகித்த வங்கிக்கும், வாடிக்கையாளரின் வங்கிக்கும் இடையிலான தகராறுகளைத் தீர்ப்பதற்கு வசதியாக தேசிய கட்டண நிறுவனம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஃபாஸ்டேக் மூலம் சுங்க கட்டணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதையும் சுற்றறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் காலதாமத பரிவர்த்தனைகளால் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்திலும் ஐசிடி 2.5 நெறிமுறையில் இயங்குகின்றன, இது நிகழ்நேர குறிச்சொல் நிலையை வழங்குகிறது, எனவே ஃபாஸ்டேக் முறையில் வாடிக்கையாளர்கள் சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பு எந்த நேரத்திலும் அதனை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற ஐசிடி 2.5 நெறிமுறைக்கு விரைவில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் நேரடியாக ரீசார்ஜ் செய்வதற்கான தேவைகளை நீக்குவதற்கு ஃபாஸ்டேக் வாடிக்கையாளர்கள் தங்களது ஃபாஸ்டேக் கணக்கில் போதிய வைப்புத் தொகையை இருப்புவைக்க ஏதுவாக யுபிஐ / நடப்பு / சேமிப்பு கணக்குகளுடன் தானியங்கி முறையில் ரீசார்ஜ் செய்வதற்கான அமைப்பின் கீழ் இணைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். யுபிஐ, இணையதள வங்கி சேவை மற்றும் பல்வேறு மின்னணு கட்டண வழிமுறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஃபாஸ்டேக் இருப்பு தொகையை எந்த நேரத்திலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.