திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரே மருமகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இடப்பேரி பகுதியைச் சார்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் மருமகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 33 இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்துமாரி. தமிழ்செல்வன் மற்றும் முத்துமாரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் அனைவருமே தங்கராஜ் உடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். முதல் மனைவி இறந்த பின்பு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை தங்கராஜிற்கு இருந்திருக்கிறது மேலும் அவர் தன்னுடைய சொத்துக்களை மகன் தமிழரசனுக்கும் மருமகள் முத்துமாரிக்கும் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் தனது இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சை மகன் மற்றும் மருமகளிடம் பேசிய போது அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர் கொடுத்த சொத்தை திருப்பிக் கொடுக்கவும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக இவர்களுக்கிடையே கருத்து மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று சொத்து விஷயமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தங்கராஜ் இரும்பு கம்பியால் அடித்ததில் அவரது மருமகள் முத்துமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் மருமகளை கொன்று விட்டு தப்பியோடிய தங்கராஜையும் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.