விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள், அதே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. மேலும், மாணவியை அவரது தாய், திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தார். மாணவி அங்கு தங்கி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறை தினங்களில் வீட்டுக்கு மாணவி வந்து சென்றபோது, அவரது தந்தை மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், வேதனை அடைந்த மாணவி, விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கடிதம் மூலம் புகார் அளித்தார். புகாரை அடுத்து சிறுமியிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். இதில், ‘மாணவிக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததும், இது குறித்து தாயாரிடம் மாணவி தெரிவித்தபோது, அதற்கு அவர், இதைப்பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை, உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர தந்தை மற்றும் உடந்தையாக இருந்த தாயை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.