ஃபெஞ்சல் புயல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ”திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல் நேரடியாக பார்வையிடவில்லை. ஏன், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை. விழுப்புரம் – திருவண்ணாமலை முழுக்க புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விசிட் செய்துள்ளார்.
அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போகிறோம். மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியை பிடிப்போம். எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிய விஜய், இதுவரை களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில்தான் கட்சி தொடங்கி ஒருவர் களத்திற்கு சென்று மக்களுடன் நிற்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர காரணமே மக்களுடன் நின்றது தான். ஆனால், விஜய் அப்படி ஒரு சான்சை தவறவிட்டுவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read More : கலைஞர் வீடு கட்டும் திட்டம்..!! யாரெல்லாம் தகுதியானவர்கள்..? எவ்வளவு பணம் கிடைக்கும்..?