மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் திருவிழா நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. எனவே இந்து சமய அறநிலை துறை தலையிட்டு நேரடியாக திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். உத்தரவை மீறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், திருவிழா காலங்களில் திருவிழாக்கென குழு அமைக்க கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.