தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைய இருக்கிறது. முதல் நாள் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இறுதி நாளான இன்று, பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை தொடங்கிய (09.10.2023) அன்றே சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு மேற்கொண்டனர். அதிமுகவின் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கக் கோரி 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம். இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்” என பேசினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், ”இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்க உரிமை இல்லை.
சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன். ஒரு சின்னத்தில் வெற்றி பெற்றவர் சின்னம் மாறி போனால் அதன்படி சட்டப்படி பதவியில் இருந்து நீக்கலாம். சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும், உரிமையை பறிக்காமலும் அவை நடைபெறுகிறது”என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பியபடி அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.