“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பருவமழைக் காலம் என்பதால் மழைக் கால தொற்றுகளில் இருந்து மக்களை காக்க மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தியுள்ளோம். காசநோய், தொழு நோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருமுட்டை விற்ற 4 மையங்கள் மீது சீல் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மையங்கள் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, ஸ்கேன் சென்டர்களை மீண்டும் மூட உத்தரவு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் நியாயமான நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இது உண்மையிலேயே வருந்தக்கூடிய நிகழ்வு. மருத்துவம் படித்தவர்களே மக்கள் நலனுக்கு எதிராக இதுபோன்று ஈடுபடுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் செய்த அநியாயத்திற்கு மருத்துவர்கள் துணை போவது வருத்தமாக உள்ளது. அரசுக்கு எதிராகவும் அநீதி இழைத்த நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் போராடுவது மனிதத்திற்கு எதிரானது. கருமுட்டை திருட்டுக்கு துணைப்போன மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மேலும், 2021ஆம் ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு பாதித்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் தற்போது வரை 3,172 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு தீவிரம் குறைவாகவே உள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்.