கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 271 நபர்களை அந்நாட்டில் உள்ள வெவ்வேறு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள எம்பகாசி பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு முன், அங்கிருந்த எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அதில் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து இருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 27 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே சிகிச்சை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
271 பேரை கென்யாவில் உள்ள வெவ்வேறு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இந்த தீ விபத்து அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எரிவாயு நிரப்பும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். இந்த சம்பவத்தினால் அருகில் இருந்த பல வீடுகளும், வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன எனத் தெரிய வந்துள்ளது.
பெரிய வெடி சட்டத்துடன் இந்த தீ விபத்து நிகழ்ந்ததென்றும், பூகம்பம் வந்தது போன்று அந்த இடமே குலுங்கியதாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களின் விளைவாக உள்ளூர் வாசிகள் இரவு முழுவதையும் வீட்டை விட்டு வெளியே கழிக்க வேண்டி இருந்தது என்றும் கூறியுள்ளனர்.
பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தீ பரவியதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கென்யாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களை அச்சத்திலும், துயரிலும் ஆழ்த்தியது.