18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். முதல் இரு நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். 26ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி ஜனாதிபதி உரையாற்றுகிறார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தான் இன்று 18வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. மக்களவைக் கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் நீட் தேர்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தை பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை , வரலாறு காணாத வெப்பச் சலனம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், தேர்வுகளை நடத்துவதில் சமீபத்திய முறைகேடுகள், இரயில் விபத்து போன்ற பல பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more ; கொசுக்கள் உங்கள் தலைக்குமேல் வட்டமிடுகிறதா?. இதுதான் காரணம்!.