மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னை-அந்தமான் இடையே 14 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல அந்தமானில் இருந்தும் 7 விமானங்கள் நாள் ஒன்றுக்கு இயக்கப்படுகின்றது. சென்னை-அந்தமான்-சென்னை இடையே 14 விமான சேவைகள் உள்ளன.
இன்று பகல் 3 மணியில் இருந்து மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தரைக்காற்றும் பலமாக வீசும். இதனால் விமானங்களை இயக்க முடியாது. எனவே அந்தமான் விமான நிலையத்தில்இன்று பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் இயங்கியது. மாலைக்கு மேல் நள்ளிரவு வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலையத்தில் கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ரத்து செய்யப்படுகின்றது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கும் விமான சேவைகள் கிடையாது. 19ம் தேதியில் இருந்து வானிலை சீரானவுடன் மீண்டும் விமானங்கள் புறப்படும். மோசமான வானிலையால் விமான நிலைய ஓடுபாதை பராமரிப்பு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 8 நாட்கள் விமான சேவைகள் பாதிப்பால் சுற்றுலாப் பயணிகள், அந்தமானில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வர்த்தகம் புரிபவர்கள் மற்றும் அவசர காலத்திற்கு மருந்துகள் எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டுள்ளன.