சென்னையில் அனல்மின் நிலைய அலுவலகத்தில் உள்ள மின்வாரிய மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சபரி மோகன் (32) என்பவர் பணிபுரிந்து வந்தார். இங்கு ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் 28 வயது மகள் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பெண் அடிக்கடி சிகிச்சைக்கு வந்து சென்றதால், மருத்துவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அப்போது மருத்துவர் சபரி மோகன் அப்பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அதன் பிறகு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மருத்துவர் மறுப்பு தெரிவித்ததுடன், அப்பெண்ணை மீண்டும் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் உல்லாசமாக இருக்க முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதாகவும், உல்லாசமாக இருக்க வரவில்லையெனில் இணையதளத்தில் அவற்றை வெளியிடுவேன், என்று மிரட்டியுள்ளார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ம் தேதி சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் டாக்டருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது பற்றி தெரிந்ததும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது பெற்றோருடன் எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணுக்கு செல்போனில் அனுப்பிய பதிவுகளையும் உரையாடல்களையும் வைத்து டாக்டர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் வழக்கு பதிவு செய்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் இது சம்பந்தமாக மகளிர் ஆணையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் சபரிமோகனை கைது செய்ய வேண்டும் என பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.