நண்பரின் மனைவியுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்த காய்கறி வியாபாரி, கட்டையால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பேரண்டபள்ளியில் உள்ள காட்டுப்பகுதியில் கொடூரமாக இளைஞர் ஒருவரது உடல் கொலைச் செய்யப்பட்டு கிடந்தது. இதனைக் கண்ட வனத்துறையினர், உடனடியாக அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை விசாரித்து வந்த நிலையில், தனது அண்ணன் சிலம்பரசனைக் காணவில்லை என்று ஓசூர் நகர காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில், கொலைச் செய்யப்பட்டு கிடந்தது சிலம்பரசன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
ஓசூர் ராஜூ தெருவில் பெற்றோருடன் வசித்து வந்த சிலம்பரசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 29 வயதான இவர், ஓசூர் பேருந்து நிலையம் அருகே தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொரு தள்ளுவண்டி வியாபாரியான குமாரும் சிலம்பரசனும் நண்பர்களாக பழகியுள்ளனர். குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நண்பர் என்ற முறையில், சிலம்பரசனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் குமார். இதில் குமாரின் மனைவி வைரமணிக்கும், சிலம்பரசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குமார், இருவரையும் கண்டித்துள்ளார். குமாரின் கண்டிப்பை அலட்சியப்படுத்திய சிலம்பரசன், தொடர்ந்து வைரமணியுடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த குமார் சிலம்பரசனை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கொலை திட்டத்தின்படி குமார், சம்பவத்தன்று பேச வேண்டும் என்று டாடா சுமோ காரில் சிலம்பரசனை அழைத்துச் சென்றுள்ளார். சிலம்பரசனை பேரண்டபள்ளி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று குமாரும், அவரது சித்தி மகன் சண்முகமும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குமார், சண்முகம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்குப் பயன்படுத்திய சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். தன்னுடைய சபல புத்தியால், கள்ளக்காதலனின் உயிரைப் பறிகொடுத்து, கணவனைக் கொலைக்காரனாக்கி விட்டு அடுத்த கள்ளக்காதலுக்கு தயாராகி நிற்கிறார் குமாரின் மனைவி வைரமணி. இவர்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.