ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. புதுச்சேரி நகரின் மைய பகுதியான வெங்கடா நகர், தென்றல் நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து தனி தீவுகள்போல மாறியுள்ளன. கடலூர் – புதுச்சேரி சாலையில் தண்ணீர் ஆறுபோல ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை படகு மூலம் மீட்டனர். மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை காரிசன் பட்டாலியன் பிரிவை சேர்ந்த இந்திய ராணுவ படையினர் புதுச்சேரி வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 5 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், மதுரை – சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.