எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக இன்று ஒரே நாளில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது… சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளூ காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தைகளிடையே இந்த `ப்ளூ’ வகை காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், இது 3 முதல் 4 நாட்கள் நீடிக்கிறது என்றும் கூறப்படுகிறது… கடுமையான காய்ச்சல், உடல் சில்லிடுதல், அதீத சோர்வு, தலைவலி, உடல்வலி, வறட்டு இருமல், தொண்டைப் புண், வாந்தி மற்றும் அடிவயிற்று வலி உள்ளிட்டவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இருமல் குறைய 2 வாரங்கள் கூட ஆகலாம். குழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்நிலையில் எலும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக இன்று ஒரே நாளில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த காய்ச்சல் காரணமாக வார்டுகள் வேகமாக நிரம்பி வருவதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது..
எப்படி தற்காத்து கொள்வது..? ஏற்கெனவே காய்ச்சல் பாதித்த குழந்தை (அ) நபரின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித்துளிகள் காற்றில் பரவி, அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது. நோயாளிகளின் எச்சில் (அ) சளியை தொட நேர்வதாலும் இது தொற்றலாம். சுத்தமாக கை கழுவுவது, முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இதை தடுக்க உதவும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். மேலும் குழந்தைகளுக்கு அவசியம் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்..