தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

அதன்படி, கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (25.11.2022) முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.