சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Rice Price | தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. மற்றொரு பக்கம் அரிசி, பருப்புகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசியை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது.
சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய மழையும் கிடைக்கவில்லை. மேலும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே, வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை தந்துவிட்டது. இவையெல்லாம் சேர்ந்தே அரிசி விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது. எனினும், ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்கனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, இப்போது கிலோ ரூ.68 ஆக உயர்ந்துவிட்டது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்து விட்டது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துவிட்டது. பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. இப்படி தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். அதைவிட முக்கியமாக, சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.