அரசுப் பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனக்கூறிய அவர், வரும் 19ஆம் தேதி 11, 10ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புக்குமான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 5.97% மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடத்தப்படும். குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதத்தை இன்னும் அதிகரிக்க முயற்சி எடுப்போம். இது ஜனநாயக நாடு யார் எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அரசுப் பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு நாங்கள் சிறந்த படிப்பு கொடுக்க முயற்சி எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.