உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஆந்திராவைச் சேர்ந்த ரமணா 1983ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை துவங்கினார். 2013ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியானார். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நாட்டின் 48-வது தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்ற நிலையில், அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை முதல் முறையாக நேரலையில் இன்று ஒளிபரப்பப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நேரலையை, https://webcast.gov.in/events/MTc5Mg என்ற இணைய பக்கத்தில் காணலாம். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.