கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து அதன் அறிக்கையை முறைப்படி காவல்துறையிடம் வழங்கி இருக்கிறார். அதேபோல் இந்த பள்ளியில் நிலைமை சரியாக 2 மாத காலம் ஆகலாம். ஆகவே, தேவைப்பட்டால் பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கலாம்.

மேலும், இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது. அதேபோல் பெற்றோர்களின் உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொள்கிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. அதையொட்டி தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். அரசு உத்தரவு இல்லாமல், பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அறிவிக்கக் கூடாது. எப்போதும் மாணவர்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.