மனைவியை கொலை செய்வதற்காக உதவி பேராசிரியர் பிச்சைக்காரன் போல் வேடமணிந்து வந்து தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை எழும்பூர் பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி(56). நந்தனம் ஆண்கள் கலைக்கல்லூரியில் வரலாற்று பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவரும் இவருக்கு, ஜெயவாணி என்ற மனைவி உள்ளார். தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார் ஜெயவாணி. இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தப்போது, அங்கிருந்த பிச்சைக்காரன் ஒருவன் ஜெயவாணியை நோக்கி ஓடிவந்து பிளேடால் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளான். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஜெயராணியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, ஜெயவாணி அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் குமாரசாமியை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தனது மனைவி சக ஊழியருடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் போலீஸாரிடம் குமாரசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், திருமணமானபோது, ஜெயவாணிக்கு வயது குறைவாக இருந்ததாகவும், தந்தையின் குடும்ப நண்பரான குமாரசாமியே அவரது கல்வி செலவை கவனித்துவந்ததாகவும், இந்தநிலையில் தனது மனைவி இளமையாக இருப்பதால் குமாரசாமி அவர் மீது சந்தேகமடைந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட குமாரசாமி மீது கொலை முயற்சி மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.