இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. கல்வி, அறிவியல் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த விஞ்ஞானி டாக்டர் கே. கஸ்தூரிரங்கனின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரி ரங்கன் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தனது 83 வயது வரை தனது அறிவாற்றலாலும், தேசியக் கல்விக் கொள்கை வரைவு ஆலோசகராகவும், விண்வெளி திட்டக் காப்புரிமை வகித்தவராகவும் முக்கிய பங்களிப்பு அளித்தவர்.
கஸ்தூரிரங்கன் அவர்கள் ISRO தலைவராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். இந்தக் காலப்பகுதியில் இந்தியா பெரும் பரிமாணங்களில் விண்வெளியில் முன்னேறியது. குறிப்பாக, IRS, INSAT, GSLV போன்ற திட்டங்களை முன்னெடுத்து, நாட்டின் திறனை உலகுக்கு காட்டியவர்.
அதற்குப் பின், இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கை 2020 உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய தலைமுறையை உருவாக்கும் கல்வி சூழலை வடிவமைத்ததில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்த கஸ்தூரிரங்கன், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
இஸ்ரோவின் அறிக்கையின்படி, கஸ்தூரிரங்கன் காலை 10.43 மணிக்கு இறந்தார். அவரது உடல் ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.