இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த ஜூன் மாதம் தனது 86-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கூடுதலாக புற்றுநோய் தாக்குதலால் நுரையீரல் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் முதல் அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 12ஆம் தேதி அவர் இறந்தார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தன்னுடைய ரூ.906 கோடி மதிப்புடைய சொத்தை தனது 33 வயது காதலிக்கு உயில் எழுதி வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த 2020இல் ஃபாசினா பெர்லுஸ்கோனி என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்யத் தொடங்கிய சில்வியோ பெர்லுஸ்கோனி, கடந்த ஆண்டு முதல் அப்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். இச்சூழலில்தான் மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி தன்னுடைய ரூ.906 கோடி (100 மில்லியன் யூரோ) மதிப்புடைய சொத்தை தனது காதலி ஃபாசினா பெர்லுஸ்கோனிக்கு உயில் எழுதி வைத்திருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மறைந்த முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு சுமார் 6 பில்லியன் யூரோ மதிப்பில் சொத்து இருக்கிறது. இதில் தனது சகோதரர் பாவ்லோ மற்றும் காதலி சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகிய இருவருக்கும் தலா 100 மில்லியன் யூரோ மதிப்புடைய சொத்தை சில்வியோ பெர்லுஸ்கோனி உயில் எழுதி வைத்திருக்கிறார்.
அவரது மூத்த பிள்ளைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகிய இருவரும் சில்வியோ பெர்லுஸ்கோனி பார்த்துவந்த வணிகத்தை கவனிப்பார்கள். மேலும் பெர்லுஸ்கோனியின் வணிகமற்ற சொத்தில் 60 சதவீதம், அவரது முதல் திருமணத்தில் பிறந்த மெரினா மற்றும் பியர் சில்வியோவுக்கும், மீதமுள்ள 40 சதவீத சொத்து அவரது இரண்டாவது திருமணத்தில் பிறந்த பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோருக்கும் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.