”அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. எங்க கட்சி அழிந்துபோய்டும்னு சொல்றதற்கு. அவர் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய பாணியில் விமர்சித்துள்ளார்.
தனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய பாணியில் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”ஏங்க அண்ணாமலை பேசுறத எல்லாம் ஒரு இதா எடுத்துக்கிட கூடாதுங்க.. அண்ணாமலைக்கு நான் ஏற்கனவே பல பதிலடி கொடுத்துவிட்டேன். அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. நான் கேட்கிறேன்.. அவர் என்ன விசுவாமித்திரரா?.. எங்க கட்சி அழிந்துபோய்டும்னு சொல்றதற்கு.. விசுவாமித்திரருக்கு தான் அந்த சக்தி இருக்கிறது. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக எத்தனையோ பேரை பார்த்த கட்சி. இது ஒரு பீனிக்ஸ் பறவை போல அதிமுக பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் பெரிய இயக்கமாக உள்ளது. இந்தியாவிலேயே 3-வது பெரிய இயக்கம் அதிமுக தான். தமிழகத்தில் தனித்துவமான கட்சியாக உள்ளது.
அண்ணாமலை இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நகைச்சுவையாக இருக்கிறது. அண்ணாமலை இப்போது நகைச்சுவையாக மாறிவிட்டார். அவருக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே, தோல்வி பயத்தை மறைப்பதற்காக இதுமாதிரி பேசி வருகிறார். சரி, அப்படி பேசினாலும் பேசிட்டு போவட்டு.. தேர்தலுக்கு இன்னும் எத்தனை நாளுங்க இருக்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஜூன் 4ஆம் தேதிக்கு அப்புறம் தெரியும் அண்ணாமலை எங்கே இருக்கிறார் என்று. முன்னாடி அண்ணாமலை அரசியலுக்கு வரும்போது கமலை சந்தித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பார்த்தார்.
அண்ணாமலை என்று பெயர் இருக்கிறதால, ஆண்டவன் சொல்றான்.. அண்ணாமலை முடிக்கிறார் என்று சொல்வதற்கு அவர் சூப்பர் ஸ்டாரும் இல்ல நடிகரும் இல்ல.. இவர் சும்மா சுஜுபி தான். அவர் பேச்சுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரை போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டேன்.. இனியும் அவர் பேசுகிறார் என்றால் என்னன்னு தெரியல“ என்றார்.