கேரளாவில் கடந்த சில மாதங்களில் அரிதான மூளையைத் தின்னும் அமீபாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் இறந்துபோவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கூறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரிகளை அமீபா என்று அழைக்கின்றோம். இதுபோன்ற இடங்களில் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கின்றன. அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும். பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும்.
அதே போல, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் . அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைவானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றனர்.