ஆளுநர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
செல்வந்தர்களை குறிவைத்து அவர்களிடம் ஆளுநர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அரசு நிறுவனங்களின் இயக்குநர் பதவி உள்ளிட்ட பெரிய பதவிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடபட்டு வருவதாக சிபிஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 4 பேரை கைது செய்திருப்பதாகவும், ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. தப்பியோடிய நபர் சிபிஐ அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியதாகவும், அவர் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவின் லட்டூர் பகுதியைச் சேர்ந்த கமலகர் பிரேம்குமார் பன்கர், கர்நாடகாவின் பெல்காம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர விட்டல் நாயக், டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா, அபிஷேக் பூரா, முகம்மது ஐஜாஸ் கான் ஆகியோருக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. உயர் பதவிகளை நியமிக்கும் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி எவ்வாறு கொள்ளையடிப்பது என்பது குறித்து அபிஷேக் பூரா, கமலகர் பிரேம்குமார் பன்கரிடம் ஆலோசித்தது குறித்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சிபிஐ, பொதுமக்கள் பலரிடம் ரூ. 100 கோடிக்கு மேல் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான கமலகர் பிரேம்குமார் பன்கர், மூத்த சிபிஐ அதிகாரியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு பல காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகளை அச்சுறுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு சகாயம் கிடைக்கச் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.