மும்பை அந்தேரியில் வசிக்கும், 86 வயது முதியவருக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரு புதிய நம்பரிலிருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது. முதியவர் வீடியோ காலை எடுத்தபோது செல்போன் திரையில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காட்சியளித்தபடி பேசினார். இதை பார்த்த முதியவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீடியோ கால் பதிவை அந்தப் பெண் பதிவு செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து முதியவரிடம் அந்த பெண் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன். அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் மூன்று லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி அந்தப் பெண் மிரட்டினார். முதியவரும் அவமானத்திற்கு பயந்து வேறு வழியில்லாமல் தனது இரண்டு வங்கிக் கணக்கிலிருந்து 2.99 லட்சம் பணத்தை அந்தப் பெண் சொன்ன வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தார். அதன் பிறகு இது குறித்து அம்போலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதே போன்று மும்பையைச் சேர்ந்த வேறொரு முதியவருக்கும் இதே முறையில் ஒரு புதிய எண்ணில் இருந்து நிர்வாண வீடியோ கால் வந்துள்ளது. முதியவர் போனை எடுத்துப் பேசியபோது அதைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவரும் அந்தப் பெண்ணுக்கு 64 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். இது குறித்து அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருவரிடமும் மோசடி செய்தது ஒரே பெண்ணா, அல்லது வெவ்வேறு நபரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. இதையடுத்து காவல்துறையினர் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். .