உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’வசூல் ராஜா’ படத்தின் மூலம் கட்டிப்பிடி வைத்தியம் என்ற சொல் நம்மிடையே பிரபலமானது. மன சோர்வோ, கவலையோ இருந்தால் நமக்கு பிடித்தமானவர்களை அன்புடன் கட்டி அணைத்து உற்சாகம் பெறலாம் என ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மூலம் அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். உலகம் முழுவதுமே Free Hugs என்ற பெயரில் சில ஆர்வலர்கள் தங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாக கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் என்று பதாகைகள் ஏந்தி இயக்கம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படித்தான் பெங்களூருவில் இரு கல்லூரி மாணவிகள் இந்த Free Hugs இயக்கத்தை நடத்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிய நிலையில், பெங்களூரு கடைத்தெருக்கள் உற்சாகத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது. அந்நகரின் சர்ச்கேட் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு அபூர்வா அகர்வால், தனிஷி என்ற இரு கல்லூரி மாணவிகள் Free Hugs என்ற பதாகைகளை ஏந்தி நின்றனர். அந்த பகுதியில் சென்ற பலரையும் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். வந்து நின்ற ஒரு மணி நேரத்தில் தாங்கள் 100 பேரை கட்டித்தழுவியதாக அவர்கள் தெரிவித்தனர். தங்கள் முயற்சி தொடர்பாக தனிஷி கூறுகையில், “ஒரு நபர் நாள்தோறும் 8 முறை கட்டிப்பிடித்தால் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதன் மூலம் மனநலன் சீரடைவதாக கூறப்படுகிறது.

நாம் வளர்ந்த பின் குடும்பத்தினரை விட்டு விலகி இருக்கும் சூழலால் குறைவாகவே கட்டி அணைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். பலரும் இந்த காலத்தில் மன அழுத்தில் தவிக்கும் நிலையில், இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என்றார். இந்த மாணவிகளின் முயற்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.