திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதிதான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அவரை சந்திப்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால், திமுகவினர் கவலையில் உள்ளனர்.