கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளின் தொலைபேசி எண்களை பயன்படுத்தி மோசடி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது என்று பயனர் நம்பும் வகையில் குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்படியென்றால், மோசடி செய்பவர்கள் முக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்குள் செல்வாக்கு மிக்க நபர்களை போல் நடிக்கின்றனர். இதற்கு அமெரிக்க மாநிலங்களின் குறியீடுகளை குறிக்கும் வகையில் போலி தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் அட்லாண்டா மாகாணங்களுக்கான +1 (404) மற்றும் சிகாகோவிற்கான +1 (773) போன்ற தொலைபேசி எண்களில் இருந்து தொடங்கும் அழைப்புகள் மோசடி செய்யக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். மோசடி அழைப்புகள் என சந்தேகித்து பாதிக்கப்பட்டவர் போனை எடுக்காவிட்டால், “இதைப் பார்க்கும்போது எனக்குப் பதில் சொல்லுங்கள்… நன்றி” என அனுப்பி நம்மை ஏமாற்ற தூண்டில் போடுவார்கள்.
ஆகையால், எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வெளியிடுவதற்கு முன்பு பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மோசடி அழைப்புகள் குறித்து புகார் கொடுக்க வேண்டும். மேலும், பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது, குறிப்பாக முக்கியமான பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.