பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தேவேந்திர குல வேளாளர் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவரது மகன் வினோத் (28). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரும், இவரது நண்பர் கார்த்திக் (25) என்பவரும் நேற்று மாலை நிர்மலா நகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வந்து வினோத்தையும், கார்த்திக்கையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர்.
இதனால் வினோத்தும், கார்த்திக்கும் படுகாயங்களுடன் அவர்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள வெவ்வேறு திசையில் தலை தெறிக்க ஓடினர். ஆனால் அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்தினர். இதில் கார்த்திக் அந்தப் பகுதியில் இருக்கும் தெருக்களில் ஓடி தப்பிவிட்டார். ஆனால் வினோத் அரசு பெண்கள் பள்ளியை கடந்து ஓடிய போது அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். அவர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை அங்கிருந்த மக்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பிறகு வினோத்தின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறியது, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த மாணவர் ஒருவரை முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரை சேர்ந்த பிருத்திகைவாசன் என்பவர், பூவரசன், பப்லு, நவீன், மணி, பிரத்தீஷ் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் மிரட்டி விட்டு சென்றுள்ளனர். மேலும் அந்த கும்பல் நேற்று அந்த மாணவரை அடிக்கும் போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து, தனது கூட்டாளிகளான வினோத், கார்த்திக், உள்ளிட்ட பத்து பேருடன் சேர்ந்து, பிரத்தீசை அடித்து மிரட்டி இருக்கின்றனர். இதனை பிரத்தீஷ் அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆறு பேரும் குடித்தது விட்டு போதையில் பைக்கில் வந்து, வினோத் மற்றும் கார்த்திக்கை கத்தியால் குத்தி விட்டு தப்பித்து சென்றனர். இதில் வினோத் உயிரிழந்தார். என்று காவல்துறையினர் கூறினர்.