சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புகைப்படம் மற்றும் இசைக் கருவிகள் கண்காட்சி 19.09.2024 முதல் 21.09.2024 வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், இரும்பாலை சாலை, ஆவின் பால்பண்னை எதிரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய வகுப்புகள் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புகைப்படம் மற்றும் இசைக் கருவிகள் கண்காட்சி 19.09.2024 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி, 20.09.2024 மற்றும் 21.09.2024 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் பாரம்பரியமிக்க இசை வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்த சான்றுகள், சான்றோர்களின் புகைப்படங்கள், சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞர்களின் புகைப்படங்களும், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் தொன்மைமிக்க கிராமிய மற்றும் செவ்விசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டும், இசைத்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளன.
இதனால் இசைக்கருவிகள் பற்றியும், இசைக் கலையின் சிறப்புகள் பற்றியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இசை ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்திட உதவியாக இருக்கும். இதன் மூலம் இசையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பொதுக்கல்வியைப் போன்றே இசைக் கல்வியை பயின்றிட ஏதுவாக அமையும். இக்கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.