மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு-2022, கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 3,09,004 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, உள்ளிட்ட 19 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 மையங்களில் நடைபெற உள்ளது.
தென்மண்டலத்தில் இத்தேர்வு 09.03.2023 முதல் 21.03.2023 வரை (சனி & ஞாயிறு தவிர) மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 4 அமர்வுகள் – முதல் அமர்வு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது அமர்வு காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரையிலும் 3-வது அமர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், 4-வது அமர்வு மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பாக இருந்தும், அதன் பிறகு அவர்களது தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க வகையில், எங்களது வலைதளத்திலிருந்து மின்னணு – தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுக்காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அது போன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்து வரும் 3 – 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்.