2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி நேற்று எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதன் மூலம் கடந்த காலங்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பட்டியலில் ராகுல்காந்தி இணைந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், தகுதிநீக்கச் சட்டம் , 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ., தகுதி நீக்கம் செய்யப்பட்டு, பதவிக் காலம் முடிந்த பிறகு, 6 ஆண்டுகள் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்று கூறுகிறது. இதேபோல் தண்டனை பெற்று மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை இழந்த மற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆர்ஜேடி மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் பட்டியலை பார்க்கலாம்..
இந்திரா காந்தி: 1971-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்திரா காந்தி அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ராஜ் நாராயணன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 1975-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.. இதைத தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருந்து தடை செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பு நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்த வழிவகுத்தது…
லாலு பிரசாத் யாதவ்: ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரும், செப்டம்பர் 2013ல் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆசம் கான்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம் கான், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது.. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ பதவியில் இருந்து ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜெயலலிதா: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.. இதையடுத்து அவர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. அப்போது அவர் முதலமைச்சராக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
விக்ரம் சிங் சைனி: பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி 2013 முசாபர்நகர் கலவர வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றார்.. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், எம்.எல்.ஏ பதவியில் இருந்து இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்..
அனில் குமார் சாஹ்னி: ஆர்ஜேடி எம்எல்ஏ அனில் குமார் சாஹ்னி 2022 அக்டோபரில் மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பீகார் சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குர்ஹானி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர்.
குல்தீப் சிங் செங்கார்: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2020-ல் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் உன்னாவோவில் உள்ள பங்கர்மாவ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல்லா ஆசம் கான்: சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வும், ஆசம் கானின் மகனுமான அப்துல்லா ஆசம் கான், பிப்ரவரி 2023 இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 15 ஆண்டு பழமையான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதீப் சவுத்ரி: காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் சவுத்ரி, தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி 2021ல் ஹரியானா சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அனந்த் சிங்:ஆர்ஜேடி எம்எல்ஏ ஆனந்த் சிங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பீகார் சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டது தொடர்பான வழக்கில் அவர் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்..