நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்த காலக்கெடு நாளை (செப்.30) முடிகிறது. இதில், நேற்று மிலாடி நபி விடுமுறை, இன்று மற்றும் நாளை விடுமுறை இல்லை என்றாலும் (காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு), கடைசி நேரத்தில் மாற்றுவது கடினம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று கூறிவிட்டன.
இதேபோல் செப்டம்பர் 28ஆம் தேதிக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால் அதை வாங்க வேண்டாம் என்று தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29ஆம் தேதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், ”ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முடிவதால் இன்று முதல், அனைத்து ஆம்னி பஸ்களிலும், 2000 ரூபாய் நோட்டை பயணியர் கொடுத்து, டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப்போவதில்லை என்று வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி. முரளி இதுகுறித்து கூறுகையில், 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அந்த நாட்களில், 2000 ரூபாய் நோட்டை வாங்கினால், செவ்வாய்க்கிழமை அதை வங்கியில் செலுத்தும்போது வாங்க மறுப்பார்கள். அதனால், இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில், 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்றார்.
அதேபோல், சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள், 500 ரூபாய் நோட்டை தான் அதிகம் எடுத்து வருகிறார்கள். 2,000 ரூபாய் நோட்டு பெரிதாக யாரும் எடுத்து வரவில்லை. ஹோட்டல்களில் ஜூலை முதலே அந்த நோட்டை வாங்கவில்லை என்றார்.